தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட். எடை போட்டு பார்க்க ஏதுமில்லா வெற்று அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். ஆட்சிக்காலம் முடிய போகிறது என்ற அலட்சியம் தான் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிகிறது.

பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தான் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவர். மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் எய்ம்ஸ் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர்களுக்கான நிவாரணம் குறித்து எந்த தகவலும் இல்லை. வரலாறு காணாத மழை வெள்ளத்துக்காக தமிழகம் கேட்ட ரூபாய் 31,000 கோடி நிவாரணத் தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை. கடந்த 3 ஆண்டாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை, சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மக்களை ஏமாற்றியது போல மக்களும் ஏமாற்றத்தை பாஜகவுக்கு தேர்தலில் வழங்குவர்.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்துள்ளது நிதிநிலை அறிக்கை.
உழவர்களின் மிக முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் உண்டா?.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. இப்படி இல்லை இல்லை என்று சொல்வதற்காக எதற்கு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் இல்லா நிலை பட்ஜெட் ஆகவே உள்ளது .அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விட்டதாக பொய்யான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பது தான் காரணமா?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஜூலை மாதம் நாங்கள் தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் கருப்பு பேட்ச் அணிந்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள். மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த கால சாதனைகளையும், நிகழ்கால பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதாகவும் பட்ஜெட் அமையவில்லை.

சமூக நீதியை அரசின் கொள்கையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறோம் என்கிறார் நிர்மலா சீதாராமன். அரசியல் வாக்கியமாக இருந்த சமூக நீதியை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம் என்றும் கூறியிருக்கிறார். அனைத்து சமூக மக்களுக்கான உரிமையை சரிசம விகிதத்தில் பறிப்பது தான் பாஜக பின்பற்றும் சமூக நீதி. சமூக நீதி என்ற சொல்லை பயன்படுத்தும் மாற்றத்தை பாஜக அடைந்திருப்பதை பார்த்து சிரிப்பு வருகிறது.

ஏழைகள், மகளிர், இளைஞர்கள், உழவர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தந்துள்ளதாக கூறியுள்ளார்கள். நான்கு பிரிவினர்களையும் 4 சாதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. வருணாசிரம கருத்தை புகுத்துவது சமூக நீதிக்கு புறம்பானது. 2047 ஆம் ஆண்டு புதிய இந்தியாவை படைப்போம் என்று பட்ஜெட்டில் கூறியுள்ளார்கள். 2014 இல் மோடி பிரதமரானபோது புதிய இந்தியா பிறந்ததாக சொன்னார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த போதும் புதிய இந்தியா பிறந்து விட்டது என்றார்கள். 2019 ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த போது புதிய இந்தியா பிறந்தது என்றார்கள்.

2047 ஆம் ஆண்டு தான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ஆனால் 2024 ஆம் ஆண்டு வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. ஒன்றிய பாஜக அரசால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை இந்தியா கூட்டணி நிச்சயம் உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.