ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தன் வசம் இழுத்து டெல்லியில் ஆட்சியை கலைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் பாஜக பல்வேறு தடைகளை உருவாக்கிய போதும் அவற்றையெல்லாம் தகர்த்து டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அரசு சேவையாற்றி சாதித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி மக்களால் பெரிதும் நேசிக்கப்படுவதால் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்பது எளிதல்ல என்பதை பாஜகவினர் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் போலி மதுபான ஊழல் என்ற குற்றச்சாட்டில் தன்னை கைது செய்து டெல்லி அரசை கவிழ்க்க நினைப்பதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே ஏழு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்ட பாஜகவினர் தலா 25 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசி அவர்களை பாஜகவில் இணைய நிர்பந்தித்ததாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக தீட்டிய பல்வேறு சதிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றும் கடவுளும் மக்களும் எப்போதும் தங்களையே ஆதரிப்பதாகவும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் பணத் தூண்டிலில் சிக்காமல் தங்கள் முடிவில் வலுவாக இருப்பதால் இந்த முறையும் டெல்லியில் பாஜகவின் சதித்திட்டம் தோல்வியை சந்திக்கும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.