தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்ற நிலையில் நடிகர் விஷால் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன். அரசியலுக்கு வந்தால் யாருடன் கூட்டணி. எத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு என்பது குறித்தெல்லாம் யோசிக்க கூடாது. அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் யோசிக்க வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்களே பொதுமக்களுக்கு நன்மைகள் செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு மட்டும் சென்று விடுவோம். நாங்கள் அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படாது. ஆனால் இங்கு அப்படி கிடையாது. வரி செலுத்தும் சாதாரண பொது மக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மட்டும் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். கிராமப்புறங்களில் மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவது கிடையாது. நான் அதிமுக மற்றும் திமுக என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கட்சியை சார்ந்தவராக இருப்பினும் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் மக்களுக்கு நன்மைகள் செய்வது மட்டும்தான் உங்களுடைய கடமை என்று கூறினார்..