ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து அவ்வை அம்மனை வழிபடுவதால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடிச் செவ்வாய் தினத்தன்று பெண்கள் மூத்த சுமங்கலிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க ஔவையார் விரதம் மேற்கொள்வார்கள். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு மேல் அல்லது வீட்டில் உள்ள குழந்தைகள் உட்பட ஆண்கள் அனைவரும் உறங்கிய பிறகு விரதத்தை துவங்குவார்கள். இந்த விரதத்தின் போது ஔவையாருக்கு செய்யும் நெய்வேத்தியங்களில் உப்பு போட மாட்டார்கள். பூஜைக்கு தேவையான அனைத்தும் தயாராகிய பிறகு ஔவையார் அம்மையார் நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்ய வேண்டும்.

பின்னர் விரதம் இருப்பவர்கள் ஒன்றாக கூடி ஒருவர் அவ்வையம்மன் கதையை கூற மற்றவர்கள் பக்தியோடு கேட்பார்கள். விரதத்தின் இறுதி பகுதியாக நெய்வேத்தியங்களை விரதம் இருந்த பெண்களே உண்பார்கள்.  ஆண் குழந்தைகள் உட்பட ஆண்கள் யாருக்கும் இந்த பூஜையை பார்ப்பதற்கோ பங்கேற்கவோ அனுமதி இல்லை. ஆடி செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டிலும் இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதோடு திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிட்டும்.