இந்திய கிரிக்கெட்டின் இளம் சென்சேஷனான வைபவ் சூர்யவன்ஷி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் வேளையில், அவரை இப்போதே சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அவசர அவசரமாகக் கொண்டு வரக்கூடாது என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கலினன் எச்சரித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்தவொரு 15 வயது வீரரும் சந்திக்காத அளவிற்கான அதீத பொதுக் கவனத்தையும் விளம்பர வெளிச்சத்தையும் சூர்யவன்ஷி தற்போது எதிர்கொண்டு வருகிறார். இன்றைய காலகட்டத்தில் இளம் வீரர்கள் கடுமையான அழுத்தங்களைச் சந்திப்பதோடு, சமூக வலைத்தளங்களும் அவர்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கலினன் கவலை தெரிவித்துள்ளார்.

​சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் இளம் வயதில் வந்தபோது அவர்களைச் சுற்றிலும் பொறுப்பான மனிதர்கள் வழிகாட்ட இருந்தனர்; ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் கோடிக்கணக்கான மக்களின் விமர்சனங்கள் ஒரு குழந்தையை நேரடியாக வந்தடைகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, சூர்யவன்ஷி இப்போதே சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என்ற வணிக உலகிற்குள் சிக்காமல், வீட்டில் தனது தேர்வுகளுக்குப் படிப்பது, நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடுவது எனத் தனது குழந்தைப்பருவத்தை இயல்பாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும், அவரது திறமையைச் சரியாகக் கையாளாவிட்டால் விபரீதமாக முடிந்துவிடும் என்றும் நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.