தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவும் விதமாக உதவித்தொகையை அளிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலமாகவே தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த போட்டி தேர்வில் பங்கேற்க போதிய பயிற்சி பெறுவது அவசியம். இந்த பயிற்சி பெறுவதில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு IAS, IPS, TNPSC நடத்தும் குரூப் 1 ஆகிய தேர்வுகளில் முதன்மை தேர்வு எழுதும் SC,ST மாணவர்களுக்கு பயிற்சி கட்டணமாக ஒவ்வொருவருக்கும் 50,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பொருளாதார நிலை காரணமாக மாணவர்களால் போதுமான பயிற்சி பெற முடியாத நிலை உள்ளதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக SC, ST நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 73 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.