இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தல் இது என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களுடைய வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியை கமல் நாத் வெளியிட்டுள்ளார். அந்த வாக்குறுதியில் குடும்பப் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை, மக்கள் அனைவருக்கும் 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு, இரண்டு லட்சம் ரூபாய் வரை விவசாய கடன் தள்ளுபடி, அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாதம் 500 ரூபாய் உதவித்தொகை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.