அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர். இன்று முதல் அயோத்தி கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கும்பாபிஷேக விழாவிற்கு வழிவகுத்த 31 வருட வளர்ச்சிகள் இந்தியாவில் அதிகரித்து வரும் பெரும்பான்மையை காட்டுகின்றன. இது இந்திய முஸ்லிம்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஓரங்கட்டலுக்கான முயற்சியாக அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் இந்துத்துவா சித்தாந்தத்தின் அலை இந்தியாவில் உள்ள மத நல்லிணக்கத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களது புனித இடங்கள் உட்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது இந்திய அரசின் கடமை” என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.