அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே 2 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

உடல்நிலையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமரவு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு இன்று நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, இது குறித்து பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதற்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினுடைய விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.. அன்றைய தினம் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்து இந்த வழக்கினுடைய வாதங்களானது நடைபெறும். செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் நடைபெற்று, அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படும். அதன்பின் இந்த வழக்கில் உத்தரவானது பிறப்பிக்கப்படும்..