அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே அவரிடம் இருந்த மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சு.முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது. அதன்பின் அவர் இலாகா இல்லா அமைச்சராக அமைச்சரவையில் நீடித்து வருகிறார். அவர் அமைச்சராக தொடர தமிழக அரசு நிர்வாக ரீதியிலான அரசாணையை வெளியிட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது “அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுத உள்ளார். அமைச்சரை நியமிக்கவோ நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்தி உள்ளார். ஆளுநர் தன் விருப்புரிமை அடிப்படையில் யாரையும் அமைச்சரவையில் நீக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.