வேலூர் காட்பாடியில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்டு 1400 பயனாளிகளுக்கு 3 கோடியே 61 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “விஷ சாராயம் குடித்து பலர் இறந்து விட்டனர் என்ற செய்தி கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிடாமல் விழுப்புரத்துக்கு சென்று விட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் தன் உயிரை பணயம் வைத்து கோயம்புத்தூர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்த்து அவர்கள் தேவையான உதவிகளை செய்ய கூறி முதல்வர்  உத்தரவிட்டார்” என்று அவர் பேசினார்.