
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தில் மா சேவா சன்ஸ் தான் என்ற பராமரிப்பு இல்லம் அமைந்துள்ளது. இங்கு பராமரிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான ரோஹித் என்பவர் உடல் நல குறைவு காரணமாக பகவான் தாஸ் கேதன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவரது உடலுக்கு யாரும் பொறுப்பேற்க வராததால் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யாமலேயே போஸ்ட்மார்ட்டம் சான்றிதழை தயாரித்து உடலை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரது உடல் நான்கு மணி நேரம் பிணவரை குளிர்சாதன ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்தது.
உடலை எரியூட்டுவதற்காக போலீசார் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றுள்ளனர். மேடை மீது உடல் வைக்கப்பட்டிருந்த போது அசைவுகள் தெரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விவகாரம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்த நிலையில் ரோகித் இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவர்கள் மூன்று பேரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது ரோஹித்தின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.