தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையார். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்கு உரியவர். ஆனால் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரு அணிகள் உருவானது. இதனால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்றது. இதன் காரணமாக ஜானகி அம்மையார் காட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து விட்டார். அதோடு கட்சி நிதி மற்றும் அறக்கட்டளை நிதி என அனைத்துமே ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த ஜானகி அம்மையார் அரசியல் துறவறம் மேற்கொண்டார். பிளவு பட்ட அதிமுக கட்சி ஜானகியின் தியாகத்தால் மீண்டும் ஒன்றிணைந்தது. இந்நிலையில் இன்று ஜானகி நூற்றாண்டு விழாவை அதிமுக கட்சியினர் கொண்டாடுகிறார்கள். இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் ஜானகி அம்மையாரை புகழ்ந்து பேசிய வீடியோ சென்னை வானகரத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அவர் பேசியதாவது, எம்ஜிஆர் மறைந்த பிறகு சூழ்நிலை கைதியாக ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்தார். அவர் அரசியலுக்கு வந்தது political accident. அவருக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. அதிமுகவின் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மையார். அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது ஜெயலலிதா அம்மையாரிடம் கட்சியை ஒப்படைத்தது அவருடைய பெருந்தன்மை. இது அவருடைய நல்ல குணம் மற்றும் பக்குவத்தை உணர்த்தியது. அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அந்த இரட்டை இலை கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஜானகி அம்மையார் தான். அதற்காக அவர் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார் என்று கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் ஜானகி அம்மையாரை புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.