நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்று நாட்கள் முடங்கி இருந்த நிலையில் இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில் அதானி குழும  பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயற்சி செய்தது. அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பின் மக்களவையில் மீண்டும் அவை நடவடிக்கை தொடங்கியது. அப்போது பா.ஜ.க மக்களவை உறுப்பினர் சி.பி ஜோஷி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஜி.பி ஜோஷி வாசித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் மையத்திற்கு வந்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவையை சபாநாயகர் ஓம் பிர்லா மதியம் 1:30 மணி வரை ஒத்தி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து தொடங்கிய மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிய போது, இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது உலகெங்கிலும் உள்ள மக்களின் குரலை கேட்டும் ஒற்றுமை யாத்திரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். அதேபோல் அக்னிவீர்  திட்டம் ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாக இளைஞர்கள் கூறினர்.

வேலையில் இருந்து பலர் நீக்கப்பட்டு வருவதாக கூறினர். இந்நிலையில் தமிழ்நாடு கேரளா முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கும் அதானி எனும் ஒரு பெயரை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அதானி எந்த தொழிலும் இறங்குவார் ஆனால் தோல்வியடைய மாட்டார். இது எப்படி? என மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். பிரதமருக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு தொழிலும் எப்படி வெற்றி பெறுகிறார். கடந்த 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரில் இருந்து 140 மில்லியன் டாலரை எட்டியது. எப்படி எனவும் இளைஞர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பாதுகாப்புத் துறையில் எந்த அனுபவம் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம் முதல் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் நாம் நடந்து செல்லும் சாலைகள் வரை அதானி விவகாரம் மட்டுமே பேசப்படுகிறதாக அவர் தெரிவித்துள்ளார்.