
தான்சானியாவின் நியோம்பே பகுதியில் வசிக்கும் எர்னஸ்டோ முஇனுச்சி காப்பிங்கா என்ற மனிதர் தனது பெரும் குடும்பத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் 16 மனைவிகள், 104 குழந்தைகள், மற்றும் 144 பேரக்குழந்தைகள் என ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கியுள்ளார். அவரது குடும்பத்திற்காக ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனி வீடுகளை கட்டியுள்ளதால், அவர் வாழும் இடமே ஒரு சமூகம் போல மாறியுள்ளது.
1961ஆம் ஆண்டு முதல் மனைவியை திருமணம் செய்த காப்பிங்கா, ஒரு வருடத்திற்குள் முதல் குழந்தையை பெற்றார். ஆனால், அவரது தந்தை அவரை மேலும் பல மனைவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். “நமது குலம் சிறியது, நீ அதை விரிவாக்க வேண்டும்” எனக் கூறிய அவரது தந்தை, முதல் ஐந்து மனைவிகளின் மணமகள் பரிசு (dowry) செலவுகளை ஏற்றுக்கொண்டார். ஒருகாலத்தில் 20 மனைவிகளுடன் வாழ்ந்த அவர், தற்போது 16 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
காப்பிங்காவின் மனைவிகளில் ஏழு பேர் சகோதரிகள் என்பதும் சிறப்பம்சமாகும். ஒருவர், “நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்கிறோம், எங்களுக்கு எந்த போட்டியும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு, சமையலறை இருக்கிறது, நாம் ஒன்றாக வேலை செய்து, ஒன்றாக வாழ்கிறோம்,” என கூறுகின்றனர். இத்தகைய பெரிய குடும்பத்தை நடத்துவதற்காக மக்காச்சோளம், பயறு, மண்ணிக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவை வளர்க்கின்றனர். தாங்கள் உபயோகிக்காத பொருட்களை விற்று, பிற தேவைகளை ஈடு செய்கிறார்கள்.