
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (வயது 40) என்பவர், தனது மனைவி வினோதினி (வயது 30) தன்னை விட்டுவிட்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டதால், மாமியார் மாதுதான் இதற்குக் காரணம் என எண்ணியுள்ளார்.
இதனால் கோபத்தில், உயிருடன் இருக்கின்ற மாமியாரின் புகைப்படத்துடன் “ஆழ்ந்த இரங்கல்” எனத் தயாரிக்கப்பட்ட அஞ்சலிப் பேனரை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், வாட்ஸ்அப்பிலும் வினோதினியின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த பேனர் பரவியதும் அதனை பார்த்த வினோதினியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, உண்மை என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வதற்காக வினோதினியை தொடர்பு கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, வினோதினி இந்த முயற்சி வெங்கடேசனால் செய்யப்பட்டதென்பதை உணர்ந்து, “என் கணவர் எனது குடும்பத்தினருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்” எனக் கூறி கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாய்வீட்டுக்கு சென்ற வினோதினி, தனது குடும்பத்திற்காக அங்குள்ள கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
வினோதினியின் புகாரின் அடிப்படையில் கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.