
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்திரி மாவட்டத்தில் பாலையா லிங்கம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நரேஷ், சுரேஷ் என்ற இரண்டு மகன்களும், சோபா, சோனி என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் திருமணம் ஆகி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யாபேட்டை மாவட்டத்தில் லிங்கம்மாவுக்கும், அவரது மூத்த சகோதரர் ராமுலுவுக்கும் சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அவர்கள் அரை ஏக்கர் நிலத்தை விற்று விட்டனர்.
மீதமுள்ள நிலத்தை ராமலு தனது தங்கை லிங்கம்மா, மூத்த மருமகள் அருணா ஆகியோர் பேரில் பட்டா எழுதிக் கொடுத்துள்ளார். அந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என இளைய மகன் சுரேஷ் சண்டை போட்டு வந்துள்ளார். இதற்கு இடையே நான்கு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக பாலையா இறந்துவிட்டார். அப்போது இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு ஏக்கர் நிலத்தை பிரித்து தர வேண்டும் என அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டனர்.
இதனால் மூன்று நாட்களாகிய இறுதி சடங்கு செய்யாமல் ஃப்ரீசர் பாக்ஸில் பாலையாவின் உடல் உள்ளது. இதனை பார்த்து லிங்கம்மாள் சோகத்தில் உள்ளார். ஊர்க்காரர்கள் வந்து அண்ணன் தம்பி இருவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் விரைவில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் பஞ்சாயத்து ஊழியர்களை வைத்து இறுதி சடங்கு நடத்துவோம் என எச்சரித்தனர். அதன்பிறகு அவர்களுக்குள்ளேயே சமாதானமாக பேசி முடித்தனர். மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று காலை இறுதி சடங்கு நடைபெற்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.