சென்னையில் நிறைவான மற்றும் சொகுசான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் சேவை விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு சென்றால் ஏசி, பலதரப்பட்ட கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏடிஎம், உணவகங்கள் என மிகவும் பிசியாக காணப்படுகிறது. ஒரு புறம் பயணம், மற்றொருபுறம் வர்த்தகம் என மெட்ரோ ரயில் சேவையின் தரம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது போன்ற வசதிகளை MRTS பறக்கும் ரயில் வழித்தடங்களிலும் கொண்டு வர CUMTA எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம்  திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை எம்ஆர்டிஎஸ் பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. இதில் வேளச்சேரி முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை சேவையை நீட்டிக்க முடிவு செய்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த பத்து வருடங்களாக நிலம் கையகப்படுத்துதல், நீதிமன்ற வழக்குகள் என கிடப்பில் போடப்பட்ட பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்து விடும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் சென்னை கடற்கரை முதல் செய்த தாமஸ் மவுண்ட் வரையிலான எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை மெட்ரோ ரயில் வழித்தட சேவை போல் மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள வெற்றிடங்களை வர்த்தக மையமாக்குவது, சாலை போக்குவரத்துடன் இணைப்பது, கடைசி மைல் வரையிலான இணைப்பிற்கான சிறப்பு பேருந்து வசதிகள் அறிமுகம் செய்வது போன்றவற்றை செயல்படுத்த உள்ளனர்.

இது போன்ற நடவடிக்கைகளால் ரயில் நிலையங்களுக்கு அருகே பொதுமக்கள் இடம் பெயர விரும்புகின்றனர். அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ரயில்வே துறையும் சிஎம்டிஏவும் இணைந்து செயல்படுத்த உள்ளது. இது மட்டுமல்லாமல் கடற்கரை முதல் தாம்பரம் வரை ஏசி புறநகர் ரயில்களை இயக்கவும் ஆலோசனை  மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து விரிவாக திட்டமிட்டு வருகின்றனர். இவை சாத்தியமாகும் போது பறக்கும் சாலை வழித்தடம் மெட்ரோ ரயிலுக்கு  இணையாக மாறி அதிகப்படியான ரயில் பயணிகளை ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.