வயதான காலத்தில் ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் தரக்கூடிய அடல் ஓய்வூதிய திட்டத்தை சென்ற மே 2015-ம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக ஓய்வூதிய தொகையாக ஒவ்வொரு மாதமும் சந்தாதாரருக்கு ரூ.1,000 முதல் 5,000 வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூகபாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும்.

அதுமட்டுமின்றி ஏதேனும் காரணத்தால் சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும். 2 பேருமே இறந்து விடும் பட்சத்தில் அந்த பென்ஷன் தொகையானது சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு சந்தாதாரர் 60 வயது பூர்த்தியடையும் போது மட்டுமே அடல் ஓய்வூதிய திட்டத்துக்கான 100% பென்ஷன் தொகையையும் இந்த சந்தாதாரர் பெற முடியும். அத்துடன் 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த அடல் பென்சன் திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது. எனினும் சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் பென்ஷன் தொகை அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான காலம் முடியும் முன்பாகவே அவரது வாழ்க்கைத் துணைக்கு (அ) சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.