செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட வண்டலூர் பகுதியில் இன்று கவர்னரின் வருகைக்காக  டிராபிக் போலீசார் வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலர் கிளாம்பாக்கம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்காக அவர்கள் வந்த காரை நிறுத்தி உள்ளனர்.

அப்போது அங்கிருந்த டிராபிக் போலீஸ் ஒருவர் கவர்னர் வருகை உள்ளது உங்களது காரை ஓரமாக நிறுத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வளாகத்திற்கு அருகில் காரை நிறுத்தியுள்ளனர். பின் கவர்னர் கான்வாய் சென்றதும் தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி வந்த டிராபிக் போலீஸ் ராஜிவ்காந்தி அங்கிருந்த 4 இளைஞர்களை தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார். அதோடு அதை வீடியோ எடுத்த இளைஞர்களின் செல்போனை பறித்து ட்ராபிக் போலீஸ் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பட்டப்பகலில் போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே முகம்சுளிக்க வைத்துள்ளது.