தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் வனிதா விஜயகுமார் நேற்று தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தஞ்சை பெரிய கோவிலுக்கு முதல் முறையாக நான் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலில் புதிய பரிணாமம் எடுத்துள்ள நிலையில் அவர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். விஜய் மற்றும் உதயநிதி இருவரும் அரசியலில் எதிரிகள் என்று கூறுவது மிகவும் சரியானது. அவர்கள் இருவரும் எனக்கு நண்பர்கள் தான். மேலும் நல்ல தமிழ்நாடு அமைவதற்கு யார் வந்தாலும் நான் என்னுடைய முழு ஆதரவையும் கொடுப்பேன் என்று கூறினார்.

மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை ஆரம்பித்த விஜய் திமுக தான் தன்னுடைய அரசியல் எதிரி என்று அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கூட திமுக கட்சிக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து திமுகவை எதிரி  என்று கூறியதோடு பாஜகவையும் மறைமுக விமர்சிக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகை வனிதா விஜயகுமார் அரசியலில் உதயநிதி மற்றும் விஜய் இருவரும் எதிரிகள் என்று சொல்வது மிக சரியானதாக இருக்கும் என்று கூறியது பேசும் பொருளாக மாறியுள்ளது.