வங்கக்கடலில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் வருகிற 11-ம் தேதி முதல் கனமழை பெய்ய ஆரம்பிக்கும் என்று தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 11ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 12ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.