பாகிஸ்தானில் அரசியல்வாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான ரகசியக் கூட்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இம்ரான் கான் அரசில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதியான ஷேக் ரஷீத் அகமது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தலைவர்களுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வைரல் வீடியோவில், ஷேக் ரஷீத் அகமது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதியும், பாகிஸ்தான் மக்காசி முஸ்லிம் லீக்  தலைவருமான காலித் மசூத் சந்து மற்றும் அந்தப் பயங்கரவாதக் குழுவின் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரான காரி முகமது யாகூப் ஷேக் ஆகியோருடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது தெளிவாகக் காட்சியளிக்கிறது. பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ரஷீத், “நான் ஹபீஸ் சாகப்பின் அடிமை” என்று பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

மேலும், தான் அமெரிக்காவில் இருந்தபோது ஹபீஸ் சயீதின் தொலைபேசி எண் தன் கைப்பேசியில் வந்ததாகவும், அதனாலேயே தான் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் விவரிக்க, கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்துள்ளனர். “நாங்கள் பாகிஸ்தானுடனும், ஹபீஸ் சயீதுடனும் இருக்கிறோம்” என்றும் அவர் முழக்கமிட்டுள்ளார்.

ஹபீஸ் சயீதுக்கு ஜால்ரா தட்டியதுடன் நில்லாமல், இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து விஷமத்தனமான மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளையும் ஷேக் ரஷீத் கக்கியுள்ளார். பாகிஸ்தானை இந்தியா “ஒருமுறை திரும்பிப் பார்த்தால் கூட” கடவுள் இந்தியாவை அழித்துவிடுவார் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், “இந்தியாவில் எந்தப் பறவையும் கீச்சிடாது, கோயில்களில் மணிகளும் ஒலிக்காது” என்று கொடூரமான வார்த்தைகளால் இந்தியாவிற்கு எதிராகத் தனது வன்மத்தைக் கொட்டியுள்ளார்.

அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான ஷேக் ரஷீத், கடந்த 2020 முதல் 2022 வரை இம்ரான் கான் அமைச்சரவையில் நாட்டின் உள்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்புள்ள பதவியில் இருந்த ஒருவரே பகிரங்கமாக ஒரு சர்வதேசப் பயங்கரவாதிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்து, அண்டை நாட்டை மிரட்டியுள்ள இந்தச் சம்பவம் உலக அரங்கில் மீண்டும் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.