தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். இவருக்கு 80 வயது ஆகும் நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவினால் காலமானார். அதாவது கடந்த  சில நாட்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமநாதபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று காலமானார். இவர் நாடக கலைஞராக அறிமுகமான நிலையில் பின்னர் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து  அசத்தியதோடு ஒரு சிறந்த டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்தார். இவர் தமிழ் சினிமாவில் நாயகன், அவ்வை சண்முகி, இந்தியன் 2, அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். இவர் ஒரு டெல்லி நாடக குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக கடந்த 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார். இவர் கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார். இவர் பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தினார்.

இவர் இதுவரை 8 சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு பசி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை வென்றார். இதேபோன்று கடந்த 1993-94 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சிறந்த கலை மாமணி விருதினையும் வென்றுள்ளார். மேலும் தற்போது டெல்லி கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அவர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.