விதிமுறைப்படி ஒரு சிக்ஸர் அடித்தால் பேட்டிங் செய்யும் அணிக்குத்தான் கொண்டாட்டம். ஆனால், ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெயில் அடித்த அசுரத்தனமான சிக்ஸர், அவரது சொந்த அணியின் வரலாற்று தோல்விக்கே காரணமாக அமைந்த விசித்திரமான சம்பவம் கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஆக்லாந்து டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயிலும், டேரன் கங்காவும் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் குவித்து அணியை அசைக்க முடியாத பலமான நிலையில் வைத்திருந்தனர். நியூசிலாந்து பௌலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய அந்த நேரத்தில், ஸ்பின்னர் டேனியல் வெட்டோரி வீசிய பந்தை கிறிஸ் கெயில் ஓங்கி அடித்து மைதானத்தின் கூரைக்கு  அனுப்பி காணாமல் போகச் செய்தார். பந்து கிடைக்காததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, மாற்றுப் பந்தைக் கொண்டுவர நடுவர்கள் முடிவு செய்தபோதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது.

நடுவர் டாரல் ஹார்பர் செய்த அந்த ஒரு சின்ன வேலை, ஒட்டுமொத்த போட்டியின் தலையெழுத்தையே மாற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை சீட்டுக்கட்டு போல சரித்தது. விதிமுறைப்படி பழைய பந்து கிடைக்காததால், ஓரளவுக்கு புதிய பந்தை எடுத்த நடுவர், அதை பழைய பந்தாக மாற்றுவதற்காக மைதானத்தின் கான்கிரீட் தரையில் போட்டு தேய்த்தார். இதில் பந்தின் ஒரு பகுதி மட்டும் பயங்கர சொரசொரப்பாக மாறி, ஆபத்தான ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய ஏதுவாக மாறியதை கிவிஸ் கேப்டன் பிளெமிங் உடனே கவனித்து, பந்தை வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டிடம் கொடுத்தார்.

காற்றில் பாம்பாய் வளைந்து வந்த அந்த மாயாஜால பந்தில், ஜாம்பவான் பிரையன் லாரா முதல் பந்திலேயே டக் அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸின் மிடில் ஆர்டரை மொத்தமாக தவிடுபொடியாாக்கினார். 148 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி கையில் வைத்திருந்த மேட்ச்சை, கிறிஸ் கெயில் அடித்த அந்த ஒரே ஒரு சிக்ஸரால் வந்த மாற்றுப் பந்தினால் கோட்டை விட்ட வெஸ்ட் இண்டீஸ், 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 27 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.