மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநகரத்தில் “நலம் 365” youtube சேனலை திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நலம் 365 என்னும் youtube சேனல் எந்தவித வணிக ரீதியிலான நோக்கங்களும் இல்லாமல் மக்களின் தேவையான சுகாதாரம் மற்றும் நலவாழ்வு குறித்த விஷயங்களை கொண்டு போய் சேர்க்கும். இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி அப்போதைய சுகாதாரத்துறை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் 2,366 பேரை பணியில் அமர்த்தி உள்ளது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பில் விதிமுறைகளுக்கு மாறாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணியில் நீட்டிக்க வைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த செவிலியர்களை வெளியே அனுப்பக் கூடாது என விரும்புகிறார். முதல்வர் முடிவின்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள 2,700 செவிலியர் பணியிடங்களையும், புதிதாக தொடங்கப்பட உள்ள மருத்துவமனைகள் மற்றும் நல வாழ்வு மையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகாதார செவிலியர்கள் 270 பேருக்கான பணியிடங்களையும் நிரப்பும் பணியை அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள மாவட்ட சுகாதார சங்கங்கள் மேற்கொள்ளும்.

இந்தப் பணியிடங்களை நிரப்பும் பணியின் போது விதிமுறைகளுக்கு மாறாக பணி நியமனம் செய்யப்பட்டு பணி நீடிப்பு செய்ய முடியாத கொரோனா காலத்தில் பணியாற்றிய 2301 செவிலியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுவரை அவர்கள் பெற்று வந்த ஊதியம் ரூ.14,000-லிருந்து ரூ.18000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும். இருப்பினும்  மனிதாபிமான அடிப்படையில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி மருத்துவத் துறைக்கு செவிலியர்களின் நியமிக்கும் போது கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.