இந்தியாவில் துவரம் பருப்பின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் துவரம் பருப்பு வரத்து சரிந்துள்ளது. இதனால் ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் விலை 8100 ரூபாயாக இருக்கிறது. இனிவரும் நாட்களில் 9,000 ரூபாயாக அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என வியாபாரிகள் கூறுகிறார்கள். மத்திய அரசு துவரம் பருப்புக்கு குறைந்தபட்சம் ஒரு குவிண்டாலுக்கு 6000 ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளது.

ஆனால் கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பருவம் தப்பி பெய்த பருவ மழையின் காரணமாக பருப்பு பயிர்கள் மழையில் நனைந்து வீணானதோடு, விவசாயிகள் பணப்பயிர்கள் உற்பத்திக்கு மாறி வருவதால் பருப்பு உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்தியாவில் பருப்பு தேவையை சமாளிப்பதற்காக பர்மா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. ஆனால் தேவையை விட குறைந்த அளவுக்கே பருப்பு இறக்குமதி செய்யப்படும் என்பதால் பருப்பின் விலை குறையாது என்று தான் கூறப்படுகிறது.