கிரிக்கெட் களத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷமும், பேட்டர்களின் பதிலடிகளும் எப்போதும் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு பரபரப்பான தருணம் தான் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் போது அரேங்கேறியுள்ளது.

அதாவது டார்வின் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்  மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஜ் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் தற்போது கிரிக்கெட் உலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது ஸ்டார்க்கின் 21-வது ஓவர் வீசப்பட்டது. அந்த ஓவரில் மெஹிதி ஹசன் மிராஜ் பந்தை பாயிண்ட் திசையை நோக்கி அடித்துவிட்டு ஒரு ரன்னுக்காக ஓடினார். பந்தின் திசையை மட்டுமே உன்னிப்பாகக் கவனித்தவாறு ஓடிய மிராஜ், கவனக்குறைவாக பிட்சின் நடுப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்  கால் வைத்து ஓடினார். இது பந்தவீச்சாளர்களின் ஓடும் பாதையைச் சேதப்படுத்தும் என்பதால் விதிகளுக்குப் புறம்பான செயலாகும்.

உடனே உஷாரான கள நடுவர் குமார் தர்மசேனா  உடனடியாக தலையிட்டு மிராஜை எச்சரித்தார். பிட்ச் சேதமடைவதை விரும்பாத வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், மிராஜிடம் நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களின் இந்த உரையாடல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது:

ஸ்டார்க் “இது என் பந்துவீச்சுப் பாதை, இப்போது உன்னுடைய பாதை. விக்கெட்டை விட்டு விலகி நட. என்று கூற  மிராஜ்: “என்னால் பார்க்க முடியவில்லை, நான் பார்க்கவில்லை என்றார். பின்னர்  ஸ்டார்க்  “இது ஒன்னும் பங்களாதேஷ் அல்ல என்றார். பந்தை மட்டுமே பார்த்ததால் தான் கவனிக்கவில்லை என்று மிராஜ் விளக்கமளித்தாலும், ஸ்டார்க்கின் அந்தப் பேச்சு களத்தில் அனலைக் கிளப்பியது.

இந்தச் சிறிய மோதலுக்கு நடுவே, பங்களாதேஷ் அணி இந்தப் போட்டியில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் தமீம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் சதத்தை விளாசினார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் பங்களாதேஷ் அணி மிகவும் வலுவான மற்றும் ஆதிக்கமான நிலையிலேயே களத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது.