இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர், டர்ஹாமில் இருந்து மான்செஸ்டருக்கு ரயிலில் பயணம் செய்த போது, பள்ளிப் பருவத்தில் விளையாடப்படும் கிளாசிக் விளையாட்டான ‘பென் ஃபைட்’  விளையாடி ரசிகர்களை தங்களது பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். டர்ஹாமில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டிக்காக இந்திய அணி ரயிலில் மான்செஸ்டர் நோக்கிப் பயணித்தது.

அப்போது, ரயிலில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த சஞ்சு சாம்சனுடன் இணைந்து வருண் சக்கரவர்த்தி பேனாவைச் சுண்டி விளையாடியுள்ளார். இந்த ஜாலியான வீடியோவை முதலில் வருண் சக்கரவர்த்தி தனது சமூக வலைதளத்தில் பதிவிட, பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிசிசிஐ (BCCI) ஆகிய அமைப்புகள் இதனைப் பகிர்ந்துள்ளதால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களின் பள்ளிப் பருவ நினைவுகளை அசைபோட வைத்துள்ளது. பள்ளி மாணவர்களிடையே பல தசாப்தங்களாகப் பிரபலமான இந்த விளையாட்டில், மேசையின் மீது பேனாவை வைத்து விரலால் சுண்டி, எதிராளியின் பேனாவை கீழே தள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டர்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவருமே இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்றிருந்தனர். எனினும், போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டதால் மிஸ்டரி ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியால் பந்துவீச முடியாமல் போனது. அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன், இப்போட்டியில் 7 பந்துகளைச் சந்தித்து வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

தற்போது இந்திய அணியின் பெஞ்சில் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருப்பதால், மோசமான ஃபார்ம் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள கடுமையான நெருக்கடியும் பிரஷரும் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும், மான்செஸ்டர் பயணத்தின் போது வீரர்கள் இருவரும் லேசான மனதுடன் தங்களது குழந்தைப்பருவ நினைவுகளை ரசித்து விளையாடியது கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலாகியுள்ளது.