பிரபல நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆனபோது நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான பரத்குமார் என்ற வாலிபர் துணிவு கொண்டாட்டத்தின் போது லாரியின் மீது எறி நடனம் ஆடினார். அப்போது லாரியிலிருந்து பரத்குமார் கீழே குதித்த போது முதுகு தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அஜித் ரசிகர் மரணமடைந்துள்ளார். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரபாகு என்பவர் அஜித்தின் தீவிர ரசிகர். இவர் துணிவு திரைப்படத்தை குடும்பத்துடன் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார்.

ஆனால் வீரபாகு மது அருந்தி இருந்ததால் பவுன்சர்கள் அவரை தியேட்டருக்குள் விடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு குடும்பத்தினர் முன்பாக வீரபாகுவை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வீரபாகுவை தவிர்த்து குடும்பத்தினரை மட்டும் படம் பார்ப்பதற்கு பவுன்சர்கள் அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வீரபாகு வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் துணிவு திரைப்படத்தால் மீண்டும் ஒரு அஜித் ரசிகர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.