ட்விட்டரில் 10 மில்லியன் (1 கோடி) பின்தொடர்பவர்களை கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற பெருமையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடன் பகிர்ந்து கொண்டது. இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடும் 10 அணிகளில், ட்விட்டரில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இதனை கொண்டாடும் விதமாக சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பு ‘உலகம் முழுவதுமுள்ள அனைத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளது. அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நுழைந்து கோப்பையை வெல்லும் என்றும், அந்த அணியின் கேப்டனாக தோனி செயல்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை அணி முதலிடம், மும்பை அணி இரண்டாம் இடம் :

சமூக ஊடக தளமான ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் 10 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 8.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. விராட் கோலியின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் நான்காவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

மற்ற அணிகளின் இடம் என்ன?

மீதமுள்ள பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் (2.9 மில்லியன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (2.7 மில்லியன்), டெல்லி கேப்பிடல்ஸ் (2.5 மில்லியன்), லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் (760.4K ) முறையே 6, 7, 8 மற்றும் 9 ஆகிய இடங்களில் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் 522.7K பின்தொடர்பவர்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 என மொத்தம் 5 முறை கோப்பையை வென்றுள்ளது.