தமிழக சட்டசபையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு விதமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியருக்கு வினா வங்கி வழங்கப்படும். அதன்படி 26,433 பேருக்கு 25 லட்சம் செலவில் வினா வங்கி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஓபிசி மாணவர்களின் விடுதிகளுக்கு இடியாப்ப அச்சு இயந்திரம் வழங்கப்படும்.

இதற்காக 1 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற அனைத்து விடுதிகளுக்கும் ரூபாய் 75 லட்சம் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விடுதிகளில் தூய்மை பணிகளுக்காக 5 கோடி நிதி வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் பட்டி பகுதியில் ஒரு உண்டு உறைவிட பள்ளி 50 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும். மேலும் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 295 அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு ரூபாய் 75 லட்சம் செலவில் புத்தகங்கள் மற்றும் புத்தக அலமாரிகள் வழங்கப்படும் என்று கூறினார்.