பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசானது பல திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களானது பெண் குழந்தையின் எதிர்காலம், கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 1997-ம் வருடத்தில் “பாலிகா சம்ரிதி யோஜனா (BSY)” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களின் கல்வி வரையிலும் நிதியுதவி வழங்குகிறது.

இதன் கீழ் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்ததும் தாய்க்கு ரூ.500 நிதியுதவி வழங்கப்படுகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்குக் கீழே (பிபிஎல்) உள்ள குடும்பங்கள் பயன்பெறும் அடிப்படையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பெண் குழந்தைகளுக்கு 10-ம் வகுப்பு வரையிலான கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி அளிக்கிறது. இந்த உதவித்தொகை பெண் குழந்தை படிக்கக்கூடிய வகுப்பின் அடிப்படையில் மாறுபடும். அதாவது, 1-3 வகுப்பு படிக்ககூடிய பெண் குழந்தைகளுக்கு வருடத்திற்கு ரூ.300 வழங்கப்படுகிறது. அதேபோல் 9-10 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்தில் இணைவதற்கு ஆன்லைன் (அ) ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க சில முக்கியமான ஆவணங்கள் இருந்தால் போதும். அதிலும் குறிப்பாக பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் இருப்பிடம், பெற்றோர் (அ) உறவினர்களின் அடையாளச் சான்றிதழ் போன்றவற்றை கொண்டு இந்த திட்டத்தை பெறலாம். அதோடு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு (அ) வங்கிக்கணக்கு பாஸ்புக் போன்றவையும் இதில் தேவைப்படலாம்.

இதற்கு ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமெனில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார சேவை மையங்களிலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பப் படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்த பிறகு மின்னணு முறையில் சமர்ப்பிக்கவும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளுக்கு தனித் தனியான படிவங்கள் வழங்கப்படுகிறது.