இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

U-19 மகளிர் உலகக் கோப்பை தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். செபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நடந்த  அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைந்துள்ளது. 108 ரன்கள் என்ற சவாலை எளிதாக துரத்திய இந்தியா, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

பெண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து 99  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் 100 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை 96 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தி  இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் (25) ரன்கள் எடுத்தார். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 18.4 ஓவர்களில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக எமி ஸ்மித் 26 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹன்னா பேக்கர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை  இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

அதேபோல அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்து கொடுத்த 108 ரன்கள் என்ற சவாலை துரத்திய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இருப்பினும், கேப்டன் ஷெபாலி வர்மா (10) சொற்ப ரன்னில் அவுட் ஆனார்.. 4வது ஓவரில் ஸ்கோர் 33 ரன்களாக இருந்த போது இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது.. அதன் பிறகு, ஸ்வேதா செஹ்ராவத் மற்றும் சௌமியா திவாரி ஆகியோர் கவனமாக தட்டி ஸ்கோரை முன்னோக்கி கொண்டு சென்றனர். இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்வேதா செஹ்ராவத் (61) அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

39 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியுடன் அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்வேதா. சௌமியா திவாரி ஸ்வேதாவுக்கு  ஆதரவாக கைகோர்த்து ஆதரவளித்தார். ஆனால்  அன்னா ப்ரோனிங் பந்துவீச்சில் சௌமியா (22) அவுட் ஆனார், மேலும் இந்தியா மற்றொரு விக்கெட்டைபறிகொடுத்தது. பின் கோங்காடி த்ரிஷாவுடன் சேர்ந்து  ஸ்வேதா செஹ்ராவத் இந்தியாவை இறுதிப் போட்டிக்குள் அழைத்து சென்றார். ஸ்வேதா செஹ்ராவத் மற்றும் சௌமியா திவாரியின் 62 ரன்களின் முக்கியமான பார்ட்னர்ஷிப் இந்தியா எளிதான வெற்றிக்கு உதவியது. ஸ்வேதா 45 பந்துகளில் (10 பவுண்டரி) 61 ரன்களும், த்ரிஷா 4 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். இந்தியா 14.2 ஓவரில்  110 ரன்கள் எடுத்து வென்றது. நியூசிலாந்தின் அன்னா ப்ரோனிங் (2) தவிர, எந்த ஒரு பந்து வீச்சாளரும் விக்கெட் எடுக்க முடியவில்லை.