துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளிலும் இது உணரப்பட்டுள்ளது.
இதுதான் நூறாண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. அதாவது அதிகாலை நேரம் வீடுகளில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இதனால் இடுப்பாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் சிரியாவின் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் இதுவரை 1300 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10,000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் துருக்கியில் குறைந்தது 912 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 10,000ஐ எட்டும் என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பை கணித்து பார்க்கும்போது பலி எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த மதிப்பீடுகள் நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியத்தில் உள்ள மக்கள் தொகை மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டமைப்புகளின் பாதிப்பு ஆகியவற்றை கொண்டே கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகளிலேயே வசித்து வருகின்றனர். மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 1 பில்லியன் டாலரில் இருந்து 10 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இது துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% வரை இருக்கும் என அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்கா, உக்ரைன், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் இரங்கல் மற்றும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.