வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்போது கடல் பகுதியில் 30 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பாக விசைப் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு போகக்கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அதனை தொடர்ந்து 3-வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250-க்கும் அதிகமான விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் திரேஷ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 500-க்கும் அதிகமான நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது..