கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே போன்று  ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸும் தீவிர பிரச்சாரம் செய்து வருவதோடு, அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகாவில் தினமும் பகலில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 8 மணி நேரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. அதன் பிறகு சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு 500 லிட்டர் விலையில்லா டீசல் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.