அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டார். ஏப்ரல் 11-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான வழக்கை மார்ச் 22-ம் தேதி விசாரிப்பதாக நீதிபதி கூறினார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், நியாயமும் தர்மமும் எங்கள் பக்கம் இருக்கிறது. இது எங்களின் அடிப்படை உரிமை. எங்களைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு இபிஎஸ் யார். கூவத்தூரில் இருந்த ஒரு கும்பல் எங்களை நீக்கினால் அந்த நீக்கம் செல்லுமா. குறுக்கு வழியில் பொதுச் செயலாளராக மாறுவதற்கு 100 பேரை வைத்து திட்டமிட்டால் அதை நாங்கள் விடமாட்டோம் என்று கூறினார்.