இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேரளாவில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்த ரயில் மொத்தமுள்ள 587 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 5 நிமிடங்களில் கடந்து செல்லும். இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் 110 கிலோமீட்டராக இருக்கும். இந்த ரயில் வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் இயங்காது. மற்ற 6 நாட்களும் இயங்கும். அதன் பிறகு இந்த ரயில் கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டையம் மற்றும் கொல்லம், ஷோரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருவனந்தபுரத்திலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1:25 மணிக்கு காசர்கோடை சென்றடையும். இதேபோன்று காசர்கோடில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.35 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

இந்நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ரயிலில் ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிக்யூடிவ் சேர் கார் என இரண்டு விதமான பெட்டிகள் இருக்கிறது. இதில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்வதற்கு ஏசி சேர் கார் பெட்டியில் 1,590 ரூபாய் கட்டணமாக இருக்கிறது. மேலும் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் 2,880 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.