சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கருப்பூர் வழியாக பயணிகள் ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்-தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் திடீரென நின்றது. அப்போது முன்பதிவு செய்து பட்டியலில் இருந்து கீழே இறங்கிய 3 பெண்களிடம் இன்ஜின் டிரைவர், டிக்கெட் பரிசோதகர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த பெண்கள் கூறியதாவது, முன்பதிவு செய்து இருக்கையை சிலர் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கின்றனர். இது குறித்து கேட்டால் இடம் தர மறுப்பு தெரிவித்து அவர்கள் தகராறு செய்கிறார்கள். எனவேதான் அபாயா சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர். அப்போது உரிய இருக்கையை ஒதுக்கி தருவதாகவும், அதுவரை முதல் வகுப்பில் பயணம் செய்யுமாறு டிக்கெட் பரிசோதகர் கூறிய பிறகு பெண்கள் ரயிலில் ஏறி உள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் புகார் அளிக்கப்பட்ட பெட்டிக்கு சென்று பார்த்தபோது 100-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அமர்ந்து இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வெளியேற்றி முன்பதிவு இல்லாத பெட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் 1 1/2 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.