புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில் பிரபல நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் மாதாந்திர தவணையில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ராஜா தவணை தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் விக்னேஷ் என்பவர் பணம் வசூலிப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ராஜா வேலைக்கு சென்று விட்டதாக அவரது மகள் ஜனனி(11) கூறினார். இதனால் விக்னேஷ் சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நிதி நிறுவனத்திற்கு சென்று விட்டார். இதற்கிடையே வீட்டிற்கு வந்த ராஜா தனது மகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அப்போது நிதி நிறுவன ஊழியர் அழைத்துச் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் ராஜா நிதி நிறுவன ஊழியர் தனது மகளை கடத்திச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.