தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவுக்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக திகழ்கிறது. தொடக்கப்பள்ளி முதல் முனைவர் பட்டத்துக்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் குறைபாட்டை போக்க கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

இந்து அறநிலையத் துறை சார்பாக பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்  தற்போது தி.மு.க அரசு தமிழகத்தின் கல்விசார் கட்டமைப்பில் பெரும் புரட்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் ஓர் அரசு கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி அமையும் போது, இடைநிற்றல் விகிதம், கற்றலில் ஏற்படும் சிரமம் போன்றவை பெருமளவில் குறையும். அதோடு சுயநிதி கல்லூரிகளை விட அரசு கல்லூரியில் பயிலவே மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் திராவிட மாடலின் அடிப்படை கூறுகளில் ஒன்றாகிய அனைத்து தரப்பினருக்குமான கல்வி என்பது இதனால் பரவலாகும் வாய்ப்பு அதிகம் ஆகும்.