தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருப்பதும், சென்னையில் மட்டும் 10-ம் வகுப்பு படிக்கும் 811 மாணவர்கள் படிப்பை கைவிட்டதும் தெரியவந்து உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைத்து பொதுத்தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக 10-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை வருகிற வெள்ளிக்கிழமை வரை நடத்தலாம் என்று அரசு தேர்வுகள் துறை கால நீட்டிப்பு வழங்கி இருக்கிறது.