கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் ராஹீலா பானு(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1989-ஆம் ஆண்டு பானு ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக அவர் சமையலறாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் தான் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்பதால் பானு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வராக விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளார். அவர் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து தேர்ச்சி பெறாத தமிழ், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற துணை தேர்வில் விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளார். நேற்று பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியானதில் ராஹீலா பானு கணிதம், தமிழ், அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.