நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகை குஷ்பூ,  நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல்,  தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார். இந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக நடிகை திரிஷாவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை திரிஷா, நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பூ ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அவர்கள் தலா ஒரு கோடி ரூபாய் என மூன்று கோடி ரூபாய் தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மூவர் மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யாத அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகானின் மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜரான நடிகை திரிஷா தரப்பு மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்கு தாக்கல் செய்ய முடியாது. தன்னை பற்றி மன்சூர் அலிகான் கூறியதற்கு குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரினார். தான் பேசியது எதிர் கருத்துதான் என்று வாதிட்டார். மன்சூர் அலிகான் தரப்பில் மூன்று பேருக்கு எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும். தான் பேசிய வீடியோவை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்கள் கேட்ட நீதிபதிகள் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு மூவரும் எதிர்  கருத்து தெரிவித்திருந்தார்கள். இது அவதூறாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. உரிமையியல் சட்டப்படி மன்சூர் அலிகான் ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது.

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையிலும், விளம்பர நோக்கத்திற்காக மன்சூர் அலிகான் இந்த வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறி அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்து,  வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அபதார தொகையை இரண்டு வாரத்தில் சென்னை அடையாறில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி மன்சூர் கானுக்கு உத்தரவிட்டார். ஒவ்வொரு கோடி ரூபாய் என மூன்று கோடி ரூபாய் தர வேண்டும் என கேட்டு நீதிமன்றம் சென்ற மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது, அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.