கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சாஹர்(21), இருகூர் பகுதியை சேர்ந்த அவரது காதலியான 19 வயது கல்லூரி மாணவி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

அவர்கள் நீர்வீழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாஹர் தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது கல்லூரி மாணவியும் தண்ணீரில் விழுந்தார். இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அப்போது மாணவி பாறையை பிடித்துக் கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் சாஹர் நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து கல்லூரி மாணவி அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் தெரிவித்து உதவிக்கு அழைத்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் தொடங்கியதால் நேற்று தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.