தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போளயம்பள்ளி கிராமத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான ரம்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு ரம்யாவுக்கும் திப்பம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அசோக் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

திருமணத்தின்போது ரம்யாவின் பெற்றோர் 11 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் கூடுதலாக பணம் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி தர வேண்டும் என கூறி அசோக் குமார் தனது மனைவியை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி ரம்யாவை அசோக் குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பிறகும் அசோக் குமாரும் அவரது பெற்றோரும் ரம்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ரம்யா அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அசோக் குமார், அவரது தாய் நாகஜோதி, தங்கை அர்ச்சனா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.