சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-வது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் ஷோபா துரைராஜன் என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்த டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன், முத்துராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடியாக சென்று ஷோபா வீட்டில் சோதனை செய்தார்கள்.

அப்போது அவரது வீட்டில் 10 பழங்கால சிலைகள்  இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சிலைகள்  சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்றும் இவை ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய  ஐம்பொன் சிலைகள் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஷோபாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த சிலைகள் பிரபல சிலை கடத்தல் மன்னனாக இருந்து மறைந்த தீனதயாளனிடம் இருந்து வாங்கியதாக தெரியவந்தது.

மேலும் இந்த சிலைகளை விற்பனை செய்வது நோக்கம் இல்லை என தெரிவித்த ஷோபா, அதனை வங்கி மூலம் பணம் கொடுத்து வாங்கியதற்கான ஆவணங்களையும் முறையாக வைத்திருந்தார். இதனால் அவர் மீது தற்போது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.