அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது. இனிமேல் இடைக்கால பொதுச்செயலாளர் தான். அதுவும் என்னைத்தான் இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக பொதுக்குழு தேர்வு செய்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறமும்,  அதிமுக சார்பில் நடந்த பொதுகுழு செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தான் இருக்கிறேன். 5 வருடத்திற்கு இதே நிலைதான் தொடரும். எனவே அதிமுகவின் தலைமை நான் தான் என்று ஓ பன்னீர்செல்வமும் மாறி, மாறி தலைமைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டதாகவும்,  ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றியுள்ள எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி தொடர்ச்சியாக பேசி வருகின்றது. இந்த நிலையில் தான் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது.

அதிமுகவுக்கு அனுப்பிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடிதத்தை வாங்க மறுத்து, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் யாருமே இல்லை. இடைக்கால பொதுச்செயலாளர் தான் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திருப்பி அனுப்பியது. இதற்க்கு விளக்கம் அளித்த தமிழக தேர்தல் ஆணையர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் எனவும்,

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. எனவே ஒருங்கிணைப்பாளர் –  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு  கடிதம் அனுப்பினோம் என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று   மீண்டும் அதே கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தபால் மூலமாக தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.