பொதுவாக நமக்கு பணம் தேவைப்பட்டால் வங்கிகளுக்கு செல்ல வேண்டும் அல்லது ஏடிஎம் மையங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது ஆதார் ஏடிஎம் மூலமாக வீட்டில் இருந்தபடியே நீங்கள் பணத்தை பெறலாம். அதாவது ஆதார் ஏடிஎம் என்பது ஆதார் இயக்கப்பட்ட கட்டண சேவை ஆகும். இதன் மூலம் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் மூலம் வீட்டில் இருந்தபடி பணத்தை எடுக்கலாம். ஆனால் அதற்கு உங்கள் ஆதாரை வங்கி கணக்குடன் இணைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் ஆதாருடன் எத்தனை வகை கணக்குகளை வேண்டுமானாலும் இணைத்திருக்கலாம்.

நீங்கள் பணத்தை எடுக்கும்போது எந்த வங்கியில் இருந்து பணம் எடுக்க விரும்புகிறீர்களோ அந்த வங்கியின் பெயரை சரியாக குறிப்பிட வேண்டும். இதற்கு முதலில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் Door Step என்ற விருப்பத்தை தேர்வு செய்து உங்களுடைய பெயர், செல்போன் நம்பர், முகவரி, பின் நம்பர், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை நிரப்பி வங்கியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு I Accept என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் சேவை ஏற்றுக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் தபால்காரர் உங்கள் வீட்டிற்கு வந்து பணத்தை கொடுப்பார். இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால் வங்கிகள் உங்களிடமிருந்து கட்டண சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலமாக 10,000 ரூபாய் வரை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.